LIVE

Tuesday, December 11, 2018

விழாக்கோலமாய் திகழ்ந்த
முப்பெரும் விழா!

==========================

ஓய்வூதியர்கள் அமைப்பின்
தூண்களாக நமது தலைவர்களின் வருகை!
களைகட்டிய பிறந்தநாள் விழாக்கள்!!
காண்போரின் எண்ணமெல்லாம் வண்ணமயமாக,
மாலை, மரியாதை, விருந்து எனத் திகழ்ந்த குடும்ப விழா!
கையில் விபரங்களடங்கிய கதிரவனுடன், கையேடும், செப்புக் குவளையும்.பின்
ர்கள் ஓஇன்று 10 12 2018 திங்கட்கிழமை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நலச் சங்கத்தின் தஞ்சை மாவட்டக் கிளையின் சார்பாக
ஓய்வூதியர்கள் தின விழா
15ம் ஆண்டு தொடக்க விழா
மற்றும் பாராட்டு விழா


ஆகிய முப்பெரும் விழாக்கள் தஞ்சை மக்கள் மன்ற மண்டபத்தில், தோழர் சந்திர பிரகாஷ் நினைவரங்கத்தில் காலை சரியாக 10 மணிக்கு தொடங்கியது மாவட்ட மாநாடு மாலை ஆறு மணிக்கு நிறைவுற்றது.
கிட்டத்தட்ட 400 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக தோழர் ஜி. நடராஜன் அகில இந்திய துணைத் தலைவர், தோழர் டி. ராமாராவ் மாநிலத் தலைவர்,
தோழர் வெங்கடாசலம், மாநில செயலர் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.


முதல் நிகழ்வாக தேசியக்கொடியை தோழர் ஓகே அவர்களும், சங்கக் கொடியினை தோழர் ருத்ராபதி அவர்களும் ஏற்றி வைக்க கூடியிருந்த அனைவரும் கோஷங்களை முழங்கினர். பிறகு தோழர். சந்திரபிரகாஷ் நினைவரங்கத்தில் நிகழ்ச்சிகள் தொடங்கின. முதல் நிகழ்வாக
கடவுள் வாழ்த்தினை தோழர் ஜெயபாரதி பாட, தமிழ்த் தாய் வாழ்த்து தொடர்ந்து இசைக்கப்பட்டது.

தோழர் ஏ கே டி மாவட்டத் தலைவர் தலைமையேற்க, மாவட்ட செயலர் சாமிநாதன் முன்நின்று நடத்திட, தோழர் அய்யனார் அவர்கள் விழாவை தொகுத்து வழங்கினார்.
தலைவர் தன்னுடைய முன்னுரையில் நிகழ்ச்சி நிரலை வாசித்து, ஒப்புதல் பெற்று, பின்னர் நம்முடைய சங்கத்தின் சமுதாய பணியினைப் பற்றி விரிவாகப் பேசினார்.

மாவட்டச் செயலர்தோழர் சாமிநாதன் தன்னுடைய வரவேற்புரையில் மாவட்டச் சங்க செயல்பாடுகள் பற்றி சுருக்கமாக எடுத்துக் கூறி அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்று நிறைவு செய்தார். பிறகு 71 வயதை அடைந்துள்ள தோழர்கள் வெங்கடாசலம் மாநில செயலர் , சந்தானகோபாலன் மாவட்ட துணைத்தலைவர், கல்யாணசுந்தரம் உறுப்பினர் ஆகியோருக்கு தம்பதியர் சகிதம் ஆளுயர ரோஜா மலர் மாலை அணிவிக்கப்பட்டு, கேக் வெட்டி, உறுப்பினர்கள் அனைவரது வாழ்த்துக்களுடனும் 70 வது பிறந்த நாள் நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தவிரவும் இந்த மாதம் பிறந்த தினம் வாய்க்கப் பெற்ற தோழர், தோழியர்கள் கேக் வெட்டி, பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

அடுத்து தோழர்கள் ஜி. நடராஜன் அகில இந்திய துணைத் தலைவர், தோழர் ராமாராவ் மாநிலத்தலைவர், தோழர் வெங்கடாசலம் மாநில செயலர் ஆகியோரை சிறப்பித்து பொன்னாடை, ஆள் உயர ரோஜா மாலை அளிக்கப்பட்டு, தஞ்சை பெரியகோயிலின் உருவம் கொண்ட நினைவுப் பரிசு, தஞ்சை தலையாட்டி பொம்மை, இனிப்பு வகைகள், தஞ்சை முந்திரி ஆகியவை அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். தவிர தோழர் கே எஸ் கே, தோழர் A.K. தனபாலன் ஆகியோரது சங்கப் பணியின் பொன் விழா மற்றும் பிஎஸ்என்எல் உதவும் உள்ளங்கள் தஞ்சை சார்பில் தோழர் சாமிநாதன், சமுதாய பணிக்கான பெருங்கொடையாளர் தோழியர் சந்திரகுமாரி ஆகியோர் விழாவில் பொன்னாடை, ரோஜா மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அவர்கள் உறுப்பினர்களின் பாராட்டுகளோடு தங்களது ஏற்புரையை நிகழ்த்தினார்கள்.

நமது மாநாட்டினை வாழ்த்தி மதுரை மாவட்ட செயலர், தோழர் வீராசாமி, தோழர்கள் கே. கிள்ளிவளவன் NFTE, A. இருதயராஜ் BSNLEU, பிரபாகரன் AIBSNLEA, A.M.F. ஜெயசீலன் FNTO, முருகையன் SEWA, மற்றும் அரியலூர் ஆறுமுகம், எஸ் ராஜா ராமன், ஆர் விவேகானந்தன்,
ஆர். மணிவண்ணன் ஆகிய பணியில் உள்ள தஞ்சை துணைப் பொது மேலாளர்கள் தங்களது சிறப்பான வாழ்த்துக்களை கூறியதோடு, தங்களது கருத்துக்களையும், நமது சங்கத்தின் பெருமைகளையும் கூறி உரையை நிறைவு செய்தனர்.
முதலாவதாக தஞ்சை மாவட்ட சங்கத்தின் வலைதளத்தை பட்டுக்கோட்டை தோழர் சிவசிதம்பரம் அவர்கள் சிறப்பான முறையிலே நிர்வகிக்க தோழர் ஜி நடராஜன் மத்திய சங்க துணைத் தலைவர் அவர்கள் வலைத்தளத்தினை பெருத்த ஆரவாரத்துடன், கரவொலிகளுக்கிடையே தொடங்கி வைத்தார். தொடர்ந்து தனது சிறப்புரை மற்றும் ஏற்புரையில் தஞ்சை மாவட்டத்தின் சமுதாய தொண்டினையும், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சை மாவட்டம் ஆற்றிய சேவையினையும் பாராட்டினார்.
இன்றைய நிலையில் எம் ஆர் எஸ் பற்றியும், அதற்கு வருங்காலத்தில் நாம் வேறு விதமாக எவ்வாறு பயன்படுவது என்பது பற்றி, மாற்று ஏற்பாடுகள் செய்வது, ஓய்வு ஊதிய உயர்வு ஆகியவை குறித்தும், ஒவ்வொரு உறுப்பினரும், நமது சங்கத்திற்காக இரண்டு உறுப்பினர்களை சேர்க்க முயற்சி எடுக்கக் கோரியும் சிறப்பானதொரு உரையை நிகழ்த்தி நிறைவு செய்தார்.

தோழர் ராமாராவ் மாநில தலைவர் அவர்கள் தஞ்சை மாவட்ட சங்கத்தின் சமுதாய பணியினையும், நாம் அறிவிப்பு செய்து நடத்தப்படுகின்ற பொன்விழா, மணிவிழா, 60 வது மண விழா, 70 வது பிறந்த நாள் விழா காட்சிகளை கண்டு, மகிழ்ந்து பிற மாவட்ட சங்கங்களிலும், மாநிலச் சங்கத்திலும் இதுபோன்ற விழாக்கள் நடத்தப்பட வேண்டுமென்று, தான் பங்கேற்கும் ஒவ்வொரு மாவட்டச் சங்க நிகழ்வுகளிலும் அறிவுறுத்துவதாக கூறி மகிழ்ந்தார். நமது தோழர்கள் ராமன்குட்டி, முத்தியாலு, டி ஜி, ஜி நடராஜன் அவர்களது போற்றுதற்குரிய சங்க செயல்பாட்டினை நினைவு கூர்ந்து அவர்களையும் பாராட்டி, உரையை நிறைவு செய்தார்.

இத்துடன் காலை நிகழ்வுகள் நிறைவடைந்தன.
உணவுக்குப் பின் இரண்டரை மணி அளவில் மதிய நிகழ்வுகள் ஆரம்பமாகின. தோழர் சாமிநாதன் மாவட்ட செயலர், ஓய்வூதியர் தின சிறப்புகளைப் பற்றி நீண்டதொரு விளக்கமான உரையை நிகழ்த்தினார்.

தோழர் வெங்கடாசலம் மாநில செயலர் பொருள் ஆய்வுக் குழுவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தனது சிறப்புரை மற்றும் ஏற்புரையில் இது ஒரு மிக திருப்திகரமான மாநாடு. பணியில் இருக்கின்ற சங்கங்கள் கூட நடத்த முடியாத அளவிற்கு இந்த மாநில மாநாடு நடைபெறுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 71 வது பிறந்த நாள் விழாவினை இதுபோன்று எனது குடும்பத்தார்கள் கூட கொண்டாடியிருக்க முடியாது என்று கூறி அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார். 78.2 நிலுவை பெற்று, 60 40 முறையையும் நீக்கியது பற்றியும், நமது pension உயர்வு மாற்றத்திற்கும் மூன்றாவது பி ஆர் சி க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தற்பொழுது உள்ள நிலையில் நாம் எவ்வாறு மற்ற ஓய்வூதிய சங்கங்களுடன் சேர்ந்து இந்த ஓய்வு ஊதியத்தை உயர்த்திப் பெறப் போகிறோம் என்பது பற்றியும், நமது ஓய்வூதிய மாதாந்திர பட்டுவாடா அந்தந்த சிசி ஏ அலுவலகங்களிலிருந்து இனி பெற போவதின் சாதக பாதங்களை பற்றியும், தற்போது நடைபெற இருக்கின்ற பட்டுவாடா முறையே சிறந்தது என்றும், தனது 71 வது வயதிலும் சங்கப்பணி ஆற்ற முடிவது பற்றியும், நமது தமிழ் மாநிலம் இந்திய அளவில் அதிகமான உறுப்பினர்களை கொண்ட மாநிலம் என்றும் சிறப்பித்து கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்து தோழர் சாமிநாதன் மாவட்டச் செயலர் ஆண்டறிக்கை வாசித்து அனைவராலும் ஒப்புதல் பெற்ற பின், தோழர் சீனு மாவட்ட பொருளாளர் நிதிநிலை அறிக்கையினை சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றார்.

தோழர் என். பாலசுப்பிரமணியன் -2 ஓய்வூதியர் கதிரவன் பற்றியும், தோழியர் மல்லிகா சுகுமாரன், பட்டுக்கோட்டை தோழர் C.V. தங்கையன், தோழர் பிரின்ஸ், தோழியர் பத்மினி ஆகியோர் அமைப்பு நிலை பற்றி உரை நிகழ்த்தினார்கள்.

தோழர் சந்தான கோபாலன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2018- 20 க்கான புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்வித்து உரையாற்ற,
தோழர் என் நடராஜன் தீர்மானங்களை வாசிக்க அனைவரது கரவொலியுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக தோழர் இருதயராஜ் நன்றி நவில, தேசிய கீதம் இசைக்கப் பட்டு நமது மாநாடு இனிதே நிறைவுற்றது.

தோழமை வாழ்த்துக்களுடன்,
வி. சாமிநாதன்,
தஞ்சை மாவட்டச் செயலர்.

====================================================================
மேலும் மாநாட்டுக் காட்சிகள் கீழே:No comments:

Post a Comment